தமிழக மரக்களஞ்சியம் என்னும் இம்மென்பொருள் தமிழ்நாடு புதுமை முயற்ச்சி திட்டத்தின்கீழ் தமிழ்நாடு வனத்துறையால் உருவாக்கப்பட்டது. இம்மென்பொருளில் எளிதாக மரப்பண்ணையம் மேற்கொள்ளத் தேவையான அனைத்து தகவல்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் தேவைக்கேற்ற மரத்தை தேர்ந்தெடுக்க வீட்டுத்தோட்ட மரம் மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மரங்களின் வளர்ப்பு தொழில்நுட்ப தகவல்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. இம்பொருள் உருவாக்க முக்கிய காரணம் மரப்பண்ணையம் மற்றும் பராமரிப்பு குறித்த தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு வழங்குவதாகும். மேலும் விவசாய பயனாளிகள் இம்மென்பொருளில் உள்ள “இடத்திற்கேற்ற மரத்தேர்வு”, “மர இனம் பொறுத்த தேர்வு”, “பயன்பாடு பொறுத்த தேர்வு” மற்றும் “இடத்திற்கேற்ற மரத்தேர்வு” பகுதிகள் வாயிலாக மண்ணிற்கேற்ற மரங்களை தேர்வு செய்து பயிரிடலாம்.
மரங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகவும், மர உபயோக பொருட்கள் தயாரிக்க, நிழல் மற்றும் இதர பயன்களுக்காக கிராமப்புற மற்றும் நகர்புறங்களில் அதிகமாக வளர்க்கப்படுகிறது. மரவளர்ப்பின் முக்கியத்துவம் தற்போது தொடர்ச்சியாக ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளால் உணர முடிகிறது. இச்சுற்றுசூழல் பாதிப்பை குறைக்க அதிப்படியான மரப்பண்ணைகளை உருவாக்கிவரும் முன்னோடி நாடாக இந்தியா விளங்குகிறது. இதற்கொன மத்திய மற்றும் மாநில அரசுகள் பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. விவசாயிகள் மற்றும் மர வளர்ப்பு ஆர்வலர்களிடையே சமூக காடுகள், வேளாண்காடுகள், பண்ணை காடுகள் மற்றும் நகர மர நடவு போன்ற தொழில்நுட்பம் குறித்த விழிப்புணர்வு தற்பொழுது அதிகரித்துள்ளது. இவ்வகையான நடவு தொழில்நுட்பங்களை நம் மக்கள் பழங்காலத்திலிருந்தே தொன்றுதொட்டு பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது. தமிழகத்தின் மொத்த வன மற்றும் மரப்பரப்பு 24.16 விழுக்காடு ஆகும். தேசிய வன கொள்கையின்படி ஒவ்வொரு மாநிலத்திற்கும் 33 விழுக்காடு மரப்பரப்பு அவசியமாகும். இதனை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தின் பரப்பளவில் 25 விழுக்காடு பரப்பில் மர / வன பரப்பை அதிகரிக்க வருவாய் நிலங்களில் மர வளர்ப்பை ஊக்குவிக்க முயற்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தனியார் நிலங்களில் மரவளர்ப்பை ஊக்குவிக்க தமிழ்நாடு வனத்துறை கீழ்கணும் மர வளர்ப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
மரப்பரப்பை அதிகரிக்க முடியும் என்ற முனைப்போடு இந்திய அரசு “பசுமை இந்தியா திட்டம்” மற்றும் “தேசிய காடு வளர்ப்பு திட்டம்” போன்ற எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்தியா மர வளர்ப்பு தொழிநுட்ப விழிப்புணர்வு மற்றும் மரப்பண்ணைய தொழில்நுட்ப வல்லுனர்களை கொண்ட நாடாகும். எனினும் விவசாயி மற்றும் வல்லுனர்களுக்கிடையேயான தொடர்பு ஒரு பெரிய குறையாகவே இன்றளவிலும் இருந்து வருகிறது. தமிழக மரக்களஞ்சியம் என்னும் வளைதளம் / மென்பொருள் விவசாயி மற்றும் வல்லுனர்களுக்கிடையே ஒரு பாலமாக செயல்பட்டு விவசாய பெருமக்கள் பயன்பெற உருவாக்கப்பட்டதாகும். இதில் மரங்களின் பயன் மற்றும் அவற்றின் வளர்ப்பு முறைகள் குறித்து தகவல்களும் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக ரீதியாக ஒரு குறிப்பிட்ட மர வகைகள் மட்டுமே பரவலாக வளர்க்கப்படுகிறது. அம்மரத்திற்கான தொழிற்சாலைகள் மட்டுமே அதிகமாக உருவாக்கப்படுகிறது. பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த அம்மரங்களின் பண்புகளைக்கொண்ட மற்ற மரங்களை அடையாளம் காணவும் மற்றும் அவற்றின் நடவு தொழில்நுட்பத்தை தொகுத்து வழங்கவும் வனத்துறை “தமிழக மரக்களஞ்சியம்” என்னும் இம்மென்பொருளை உருவாக்கியுள்ளது. “நவீன இந்தியா” திட்டத்திற்கேற்ப நவீன தேடல் பகுதிகளோடு இம்மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.